×

பேர குழந்தைகளுடன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு வீட்டை இடிக்க முயற்சிப்பதை தடுக்கக்ேகாரி

திருவண்ணாமலை, அக். 31: குடியிருக்கும் வீட்டை இடித்து, இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்தக்கோரி பேர குழந்தைகளுடன் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், சுய தொழில் கடனுதவி, பட்டா மாற்றம், அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 446 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்மீது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, துறை வாரியாக கலெக்டர் ஆய்வு நடத்தினார். நிலுவையில் உள்ள மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், செங்கம் அடுத்த உச்சிமலைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மல்லிகா(65) என்பவர், தனது இரண்டு பேர குழந்தைகளுடன் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ெணண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்துச் சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து, மல்லிகாவிடம் நடத்திய விசாரணையில், உச்சிமலைக்குப்பம் கிராமத்தில் தகர ஷீட் அமைத்து கட்டியுள்ள வீட்டை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் இடித்து அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர்.

அந்த வீட்டை இடித்துவிட்டால், வாழ்வதற்கு வேறு இடமில்லை. எனவே, வீட்டை இடிக்க முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, சிறுவர்களை அழைத்து வந்து தீக்குளிக்க முயற்சிப்பது தவறான செயல் என போலீசார் எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து, மூதாட்டி மல்லிகா கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்நிலையில், நல்லவன்பாளையம் ஏரிக்கரை பகுதியில் குடியிருக்கும் தங்களுடைய குடிசை வீடுகளுக்கு மாற்றாக, வேறு வீடுகள் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்பிடிப்பு பகுதி என காரணம் காட்டி, குடியிருக்கும் வீடுகளையும் இடிக்க முயற்சிப்பதாகவும், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட தங்களுக்கு அரசு சார்பில் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித்தர வேண்டும் என வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அங்கிருந்து கலைந்துச் சென்றனர். மக்கள் குறைதீர்வு கூட்டத்தை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக, டிஆர்ஓ பிரியதர்ஷினி முன்னிலையில், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

The post பேர குழந்தைகளுடன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு வீட்டை இடிக்க முயற்சிப்பதை தடுக்கக்ேகாரி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...